Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ தெலுங்கானா பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கு 'அட்மிஷன்' தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

தெலுங்கானா பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கு 'அட்மிஷன்' தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

தெலுங்கானா பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கு 'அட்மிஷன்' தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

தெலுங்கானா பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களுக்கு 'அட்மிஷன்' தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு

ADDED : செப் 26, 2025 01:47 AM


Google News
சென்னை:''தமிழக அரசு பரிந்துரை செய்யும் மாணவர்களுக்கு, தெலுங்கானா விளையாட்டு பல்கலையில் இடம் வழங்கப்படும்,'' என, தெலுங்கானா மாநில முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் திட்டம் என, பல்வேறு திட்டங்கள், கல்வித்துறையில் செயல்படுத்தப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டுக்கான, புதுமைப்பெண் - தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழா, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயரில், நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.

திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் , தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அப்போது, அவர்கள் பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின்: இந்நிகழ்ச்சி, எங்களை பாராட்டிக் கொள்ள அல்ல; உங்களை கொண்டாடுவதை பார்த்து, அடுத்த கல்வியாண்டு மணவர்களுக்கு, படிப்பில் ஆர்வம் அதிகமாக வேண்டும்.

தெலுங்கானாவில் செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்களை, தமிழகத்தில் செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.

காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின், மாணவ - மாணவியர் வருகை அதிகரித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தால், பிளஸ் 2 படித்தவர்களில், 75 சதவீதம் பேர் உயர் கல்வியில் சேருகின்றனர்.

தமிழகம் கல்வியில் பெற்றுள்ள எழுச்சியை, இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன.

நம் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்த நினைப்போருக்கு, நாம் பயத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசு உருவாக்கி தரும் வாய்ப்புகளை, மாணவ - மாணவியர் பயன்படுத்தி, உயர, உயர பறக்க வேண்டும்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி: தமிழகம் கல்வியிலும், விளையாட்டிலும், முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம், தெலுங்கானா மாநிலத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும்.

தெலுங்கானா அரசு, கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. 'இளம் இந்தியா திறன் பல்கலை'யை துவக்கி உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும், தெலுங்கானா, 1. 10 லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகளை உருவாக்குகிறது. ஆனால், அவர்களுக்கு போதிய வேலை கிடைக்கவில்லை.

இருப்பினும், வேலை வாய்ப்புகள் அதிகம் காத்திருக்கின்றன.

இதற்கு காரணம், மாணவர்களுக்கு போதிய திறன் இல்லை. எனவே, மாணவ - மாணவியரின் திறன்களை மேம்படுத்த, பொதுத் துறை மற்றும் தனியார் பங்களிப்புடன், இளம் இந்தியா திறன் பல்கலை துவக்கப்பட்டது.

அதேபோல், இளம் இந்தியா விளையாட்டு பல்கலை துவக்கப்பட்டுஉள்ளது. தமிழக அரசு பரிந்துரை செய்யும் மாணவர்களுக்கு, தெலுங்கானாவில் உள்ள விளையாட்டு பல்கலை மற்றும் அகாடமியில் பயிற்சி, படிப்பு வழங்க தயாராக உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

ஜப்பானிய மொழியில் பேசிய மாணவி


நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பெற்ற, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிரேமா, தனது முதல் மாத ஊதியத்தை, விழா மேடையில் தனது தந்தைக்கு கண்ணீர் மல்க வழங்கினார் ஜப்பானில் வேலை பெற்ற மாணவி ஜலிசா, நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தியதற்காக, ஜப்பானிய மொழியில், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us