கட்சிகளிடம் 'டிபாசிட்' வசூலிக்கும் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் கெடு
கட்சிகளிடம் 'டிபாசிட்' வசூலிக்கும் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் கெடு
கட்சிகளிடம் 'டிபாசிட்' வசூலிக்கும் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் கெடு

சென்னை:அரசியல் கட்சிகளின் பொது கூட்டங்களால் ஏற்படும் சேதங்களால், பலர் பாதிக்கப்படுவதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அத்தகைய கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முன், அரசியல் கட்சிகளிடம் முன்வைப்பு தொகையான, 'டிபாசிட்' வசூலிப்பது குறித்து விதிமுறைகளை வகுக்க, அக்., 16ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை, எந்த பாரபட்சமும் இன்றி பரிசீலித்து அனுமதி வழங்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட கோரி, த.வெ.க., தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
எப்.ஐ.ஆர்., பதிவு கடந்த முறை, இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 'பெரியளவில் நடத்தப்படும் கூட்டங்களின் போது ஏற்படக்கூடிய எந்தவொரு இழப்பையும் ஈடுசெய்ய, அரசியல் கட்சிகளிடம் இருந்து பாதுகாப்பு தொகை வசூலிக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்க வேண்டும்' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, ''இவ்விவகாரத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அவகாசம் வழங்க வேண்டும். தற்போது, ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னரே வசூலிக்க, எந்த சட்டமும் வழிவகை செய்யவில்லை,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கூறியதாவது:
முன்வைப்பு தொகை வசூலிக்க சட்ட விதிகள் ஏதும் தேவையில்லை; மனமிருந்தால் போதும். பொது கூட்டங்களின்போது ஏற்படும் சேதங்களால், பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வழக்கமாக, ஏதேனும் ஒரு சம்பவம் நடந்த பின், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்வர்.
தள்ளிவைப்பு பெரும்பாலான நேரங்களில், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடு கிடைப்பதில்லை. எனவே, அவர்களின் நலன்களைப் பாதுகாப்பது அவசியம் என்பதால், இவ்விவகாரத்தில் விதிமுறைகளை கொண்டு வாருங்கள்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
மேலும், முன்வைப்பு தொகை வசூலிப்பது தொடர்பாக விதிமுறைகள் வகுக்க, அரசுக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை அக்., 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.