கோவில் காவலாளி கொலை வழக்கு சாட்சிகளுக்கு மிரட்டல்: சி.பி.ஐ., விசாரணை
கோவில் காவலாளி கொலை வழக்கு சாட்சிகளுக்கு மிரட்டல்: சி.பி.ஐ., விசாரணை
கோவில் காவலாளி கொலை வழக்கு சாட்சிகளுக்கு மிரட்டல்: சி.பி.ஐ., விசாரணை

சென்னை:கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகளான, அவரது தம்பி நவீன்குமார் மற்றும் சக்தீஸ்வரன், அருண்குமார், பிரவீன்குமார் ஆகியோருக்கு வந்த மிரட்டல் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சாட்சிகளாக, அவரின் தம்பி நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் மற்றும் அவருடன் பணிபுரிந்த பிரவீன்குமார், சக்தீஸ்வரன் ஆகியோர் உள்ளனர்.
இவர்களுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
மேலும், சாட்சிகளின் வீடுகளில், 'சிசிடிவி கேமரா' மற்றும் அபாய ஒலி எழுப்பும் அலாரம் பொருத்தி கண்காணிப்பு நடக்கிறது.
அஜித்குமார் கொலை வழக்கில், ஏற்கனவே ஐந்து போலீசார் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், காவல் வாகன ஓட்டுநர் ராமச்சந்திரன் பெயரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் சேர்த்துள்ளனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கறிஞர்கள் கார்த்திக் ராஜா மற்றும் மாரீஸ்குமார் ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதுவரை நடந்துள்ள விசாரணை குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர்.
அப்போது, 'பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதல் தகவல் அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை நகல், தடய அறிவியல் ஆய்வறிக்கை தரப்படவில்லை' என, மனுதாரர்கள் வாதிட்டனர்.
சி.பி.ஐ., தரப்பில், இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, 90 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், மனுதாரர்களுக்கு சட்டப்படியான ஆவணங்களை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.