பிளாஷ்பேக்: பாலிவுட் நடிகர்களின் ஆலோசகராக இருந்த வலம்புரி சோமநாதன்
இப்போதெல்லாம் ஒரு படத்தின் வசனத்தை அந்த படத்தின் இயக்குனர்களே எழுதிக் கொள்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவதற்கென்று தனித்தனியாக ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் நட்சத்திர அந்தஸ்தோடு இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் வலம்புரி சோமநாதன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்திற்கு தனித்தனியாக சம்பளம் வாங்குவாராம். மூன்றையும் கூட்டினால் அந்த படத்தில் நடிக்கும் ஹீரோவின் சம்பளத்திற்கு நிகராக இருக்கும்.
புதுக்கோட்டை மாவட்டம் வலம்புரியில் பிறந்த சோமநாதன் 'திருமகள்' என்ற பத்திரிகையின் மூலம் தனது பணியை தொடங்கினார். பின்னர் சென்னை வந்து கவிஞர் கண்ணதாசனின் பத்திரிகைகளில் பணியாற்றினார். பத்திரிகைகளில் சோமநாதன் எழுதிய கதைகளால் கவரப்பட்ட ஏவிஎம் செட்டியார். அவரை தனது கதை இலாகாவில் இணைத்துக் கொண்டார்.
சோமநாதன் எழுதிய படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றது. அவைகள் குடும்ப படங்களாக இருந்தது. சோமநாதன் சொந்தப்பட நிறுவனம் ஆரம்பித்து, திருமணம்' என்னும் படத்தை பீம்சிங் இயக்கத்தில் எடுத்தார். படம் வெற்றியடைந்தது. தொடர்ந்து பீம்சிங்கும், சோமநாதனும் இணைந்து பல வெற்றிப் படங்களை தந்தார்கள். திரைக்கதை அமைப்பில் திறமையாக இருந்த சோமநாதனை திலீப்குமார் உள்ளிட்ட சில பாலிவுட் நடிகர்கள் கதை ஆலோசகராக வைத்துக் கொண்டார்கள். அவர்கள் ஒரு கதையில் நடிக்கும் முன்பு அந்த கதையை சோமநாதனை படிக்க வைத்து அவரது ஆலோசனைகளை கேட்டு நடித்தார்கள்.
சிகப்புக்கல் மூக்குத்தி, துணை இருப்பாள் மீனாட்சி, லலிதா, துணைவி படங்களை இயக்கினார். தேசிய மற்றும் மாநில திரைப்பட விருது கமிட்டியில் பணியாற்றினார், பல திரைப்பட சங்கங்களில் பணியாற்றினார். ரஷிய நாட்டின் அழைப்பின் பேரில் மூன்று முறை ரஷிய திரைப்பட விழாவிற்கு சென்று வந்தார். கடந்த 2010ம் ஆண்டு தனது 82வது வயதில் காலமானார்.