உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: வாணிஸ்ரீயின் உறுதியை உடைத்த தமிழ் இயக்குனர்

பிளாஷ்பேக்: வாணிஸ்ரீயின் உறுதியை உடைத்த தமிழ் இயக்குனர்


1970களில் முன்னணியில் இருந்தவர் வாணிஸ்ரீ. ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் தன்னை இணைத்துக் கொண்டார். இனிமேல் கேமரா முன்னால் நிற்க மாட்டேன் என்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

ஆனால் பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்த போதும் உறுதியாக நடிக்க மறுத்து விட்டார். இந்த நிலையில் விசுவிடம் உதவியாளராக இருந்த டி.பி.கஜேந்திரன் 'வீடு மனைவி மக்கள்' படத்தை இயக்கி அது பெரிய வெற்றி பெற்றது. ஒரு நடுத்தர வர்க்கத்து கணவன் மனைவி தங்கள் மகன்களின் ஆதரவின்றி எப்படி ஒரு வீட்டை கட்டுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. இறந்த தன் அம்மாவிற்கு மகளே கொள்ளி வைத்த படத்தின் கிளைமாக்ஸ் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கணவனாக விசுவும், மனைவியாக கே.ஆர்.விஜயாவும் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தை கன்னடத்தில் தயாரிக்க விரும்பினார் தயாரிப்பாளர் துவாரகேஷ். அதையும் டி.பி.கஜேந்திரனே இயக்கினார். விசு நடித்த கேரக்டரில் ஸ்ரீநாத் நடித்தார், ஆனால் கே.ஆர்.விஜயா கேரக்டருக்கு வாணிஸ்ரீதான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் டி.பி.கஜேந்திரன். அவரை சந்தித்து விஷயம் சொன்னதும் கஜேந்திரனை திட்டி அனுப்பி விட்டார் வாணிஸ்ரீ. தமிழ் படத்தை பாருங்கள் பிடித்தால் நடியுங்கள் என்று கூறிவிட்டு வந்து விட்டார். படத்தை பார்த்த வாணிஸ்ரீ உடனே படத்தை ஆரம்பியுங்கள் என்று கூறிவிட்டார். 14 வருடங்களுக்கு பிறகு அவர் நடித்த படம் இது. கன்னடத்திலும் படம் பெரிய வெற்றியை பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !