ஆயிரத்தில் ஒருத்தி சாரா அர்ஜுன்
கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் வெளியான துரந்தர் முதல் பாகம் மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான அதன் இரண்டாம் பாகம் என இரண்டு பாகங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. கதாநாயகனாக நடித்த ரன்வீர் சிங், வில்லன்களாக நடித்த அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், ராகேஷ் பேடி உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் படத்தில் இடம்பெற்ற பல கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டதுடன் அதற்கு பொருத்தமான நட்சத்திரங்களும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இந்த படத்தில் நடிகை சாரா அர்ஜுன் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த கதாபாத்திரத்தில் சிறுவயது நந்தினியாக நடித்திருந்தார் சாரா. இதைத்தொடர்ந்து தற்போது இரண்டு முறை ஆயிரம் கோடி வசூலை தாண்டிய படத்தின் கதாநாயகி என்கிற மிகப்பெரிய அந்தஸ்தை சாரா பெற்றுள்ளார். ஆனால் இந்த வாய்ப்பு அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைத்து வரவில்லை.
துரந்தர் படத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சமீபத்தில் துரந்தர் படத்தின் கேஸ்டிங் டைரக்டரான முகேஷ் சப்ரா கூறும்போது, “இந்த படத்தில் யாழினி கதாபாத்திரத்திற்கு இதுவரை ரசிகர்களிடம் மிகப்பெரிய அறிமுகம் இல்லாத நடிகை தான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தோம். இதற்காக கிட்டத்தட்ட ஆயித்திற்கும் மேற்பட்ட பெண்களை ஆடிசன் செய்தோம். அதில் ஒருவராக ஆடிசனில் கலந்து கொண்டு தேர்வானவர் தான் சாரா” என்கிற ஒரு ஆச்சரிய தகவலை கூறியுள்ளார். அந்த வகையில் சாரா அர்ஜுனை ஆயிரத்தில் ஒருத்தி என்று தாராளமாக சொல்லலாம்.