உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தாமதமாகும் 'ஜனநாயகன்' ரிலீஸ்

மீண்டும் தாமதமாகும் 'ஜனநாயகன்' ரிலீஸ்


தமிழக சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டுதான் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தின் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுவது தாமதம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு ஒன்று இருந்தது. நீதிமன்ற வழக்கு வரை சென்று பின்னர் வாபஸ் பெற்றார்கள்.

சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபைத் தேர்தலும் முடிந்துவிட்டது. அதனால், விரைவில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு விடும் என தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்ததாம். ஆனால், படத்தை மீண்டும் பார்த்துவிட்டுத்தான் சான்றிதழ் வழங்குவோம் என தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மே 4ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அதற்கடுத்த சில நாட்களில் தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறதாம். அதனால், மே 8 அல்லது 15ம் தேதிகளில் படத்தை வெளியிடலாமா என யோசிக்கிறார்களாம். ஆனால், தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்காமல் எந்த அறிவிப்பையும் வெளியிட வேண்டாம், அதுவரை பொறுமையாக இருப்போம் என்று முடிவு செய்துள்ளார்களாம்.

மே 14ம் தேதி சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படம் வெளிவருவதால் அந்த வாரத்திலும் படத்தை வெளியிட முடியாது. மே 22 அல்லது மே 29 ஆகிய நாட்களில் 'ஜனநாயகன்' வெளிவர வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !