திருச்செந்தூர் கோயிலில் வேல் ஏந்தி விஜய் வழிபாடு : எதிரிகளை வீழ்த்த சத்ரு சம்ஹார யாக பூஜை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் விஸ்வரூப தரிசனம் செய்தார். கடலில் இறங்கி வழிபாடு செய்த அவர், மலர்கள் சாற்றி முருகனை வழிபட்டார்.
நடிகரும், தவெக., தலைவருமான விஜய் நடந்து முடிந்து தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து தனது வேட்பாளர்களுடன் களம் கண்டார். தேர்தல் முடிவுகள் வரும் மே 4 அன்று வர உள்ளது. விஜயின் வருகையால் சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என யாராலும் கணிக்க முடியாத சூழலில் உள்ளது.
இந்நிலையில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் விஜய் அதிகாலை 1.30 மணிக்கு மதுரை வந்தார். நள்ளிரவு முதலே ஏராளமான ரசிகர்கள் அவரை காண விமான நிலையத்தில் காத்திருந்தனர். பின்னர் அங்கிருந்து காரில் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்றார். பட்டு வேட்டி சட்டை அணிந்து திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இன்னும் சில நாட்களில் தேர்தல் முடிவு வர இருக்கும் நிலையில் அவரது இந்த திருச்செந்தூர் தரிசனம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வேல் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
சத்ரு சம்ஹார யாகம்
எதிரிகளை வீழ்த்தி தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டி, தமிழக வெற்றி கழகம் சார்பில், திருச்செந்துார் முருகன் கோவிலில் இன்று சத்ரு சம்ஹார யாகம் நடைபெற்றது.
ஜோதிடர் ஆலோசனைப்படி பூஜை
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: எங்கள் தலைவர் விஜய், ஹிந்து மத சடங்குகள் மீது அதீத நம்பிக்கை கொண்டவர். தான் தொடங்கும் எல்லா விஷயங்களையும் ஜோதிடரிடம் ஆலோசனை பெற்று, அவர் குறித்து கொடுக்கும் நேரத்தில் தான் செய்வார். கட்சி தொடங்கியதில் இருந்து, ஜோதிடரின் அனுமதி இல்லாமல் விஜய் எதையுமே செய்தது இல்லை. அதனால்தான், கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகளில், இவ்வளவு பெரிய இடத்துக்கு விஜய் வளர்ந்துள்ளார். இந்நிலையில், சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறவும், தனது அரசியல் எதிரிகளை வீழ்த்தவும் சில சடங்குகளை செய்ய வேண்டும் என ஜோதிடர் ஆலோசனை கூறியதை அடுத்து, விஜய் அதற்காக திட்டமிட்டார். அதன்படி, திருச்செந்துார் முருகன் கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தப்பட்டது.