உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: செவிக்கு விருந்தளித்து, விழிக்கு விருந்தளிக்காமல் போன கே பாக்யராஜின் “காவடிச் சிந்து”

பிளாஷ்பேக்: செவிக்கு விருந்தளித்து, விழிக்கு விருந்தளிக்காமல் போன கே பாக்யராஜின் “காவடிச் சிந்து”


1980களின் மத்தியில் ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்த முன்னணி நாயகர்களின் படங்களுக்கு என ஒரு தனி அந்தஸ்தும், வரவேற்பும் ரசிகர்களிடையே பெரிதும் இருந்து வந்த போது, திருட்டு முழியோடு கூடிய ஒரு அப்பாவித்தனமான நடிப்பை வெளிக்காட்டி, அசைக்க முடியாத நம்பிக்கையோடு, தனது தலைசிறந்த திரைக்கதையால் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன்பால் ஈர்த்து, தனக்கென ஒரு தனி பாணி வகுத்து, திரைத்துறையில் பயணித்து, வெற்றிக் கொடி நாட்டியவர்தான் பல்துறை வித்தகரான கே பாக்யராஜ்.

வலுவான ஒரு கருத்தை தனது வழக்கமான நகைச்சுவை பாணியில் சொல்லி, அனைவரும் ரசிக்கும் திரைப்படத்தை தருவதாலோ என்னவோ, குழந்தைகள் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசமின்றி ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கின்றார் இவர். குறிப்பாக இவரது திரைப்படங்களுக்கு பெண் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் இவர் நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கி, 1986ல் வெளிவர இருந்து, பின் பாதியிலேயே நின்று போன ஒரு திரைப்படம்தான் “காவடிச் சிந்து”.

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “முக்தா பிலிம்ஸ்” மற்றும் “குஞ்சப்பன் பிக்சர்ஸ்” இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தின் நாயகனாக கே பாக்யராஜ் நடித்திருந்ததோடு, கதை திரைக்கதை வசனம் எழுதி, இயக்கி படத்தின் இசையமைப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக படத்திற்கான இசைப் பணியையும் அவரே ஏற்றிருந்தார். இவருக்கு ஜோடியாக முதல் முறையாக நடிகை அமலா நாயகியாக நடித்திருந்த இத்திரைப்படத்திற்காக 10 பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பாடல்களை வாலி எழுதியிருந்தார். இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளிவந்து, பத்திரிகைகளில் விளம்பரமும் செய்யப்பட்டு, படப்பிடிப்பும் துரிதகதியில் நடத்தப்பட்டு, சில ஆயிரம் அடிகள் வரை வளர்ந்திருந்த நிலையில், மேலும் தொடர முடியாமல் திடீரென படம் கைவிடப்பட்டது.

படத்தின் பாடல்கள் மட்டும் வெளிவந்து, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில், 1990ம் ஆண்டு, ரஹ்மான், ராதிகா, நிழல்கள் ரவி, ரூபிணி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் சி பி கோலப்பன் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையமைத்து வெளிவந்த “பட்டணந்தான் போகலாமடி” என்ற திரைப்படத்திற்காக கே பாக்யராஜின் “காவடிச் சிந்து” திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட “சாமக்கோழி கூவியாச்சு”, “எட்டு முழம் வேட்டிக்கட்டி”, “என்னென்னவோ கேட்கும் வயசிது” ஆகிய மூன்று பாடல்களை கே பாக்யராஜிடம் கேட்டுப் பெற்று தங்களது படத்திற்குப் பயன்படுத்திக் கொண்டனர் படக்குழுவினர்.

இதில் “சாமக்கோழி கூவியாச்சு” என்ற பாடல் மட்டும் கே பாக்யராஜ் மற்றும் அமலா நடித்து காட்சி வடிவில் இருந்ததால், அதை தங்களது “பட்டணந்தான் போகலாமடி” படத்தின் நாயகியரான நடிகை ராதிகாவும், ரூபிணியும் சென்னைக்கு வந்து, உதயம் திரையரங்கில் படம் பார்ப்பது போன்ற ஒரு காட்சியில் அந்தப் பாடலை இணைத்திருந்தனர். மற்ற இரண்டு பாடல்களையும் இந்தப் படத்தின் நாயகர்கள் மற்றும் நாயகியர் பாடுவதாகக் காட்சிப்படுத்தியிருந்தனர்.

திட்டமிட்டிருந்தபடியே இயக்குநர் கே பாக்யராஜின் “காவடிச் சிந்து” திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நடத்தப்பட்டு, 10 பாடல்களோடு படம் வெளிவந்திருந்தால், கே பாக்யராஜின் வெற்றித் திரைப்படங்களின் பட்டியலில் இந்தக் “காவடிச் சிந்து” திரைப்படத்திற்கும் ஒரு காவியமயமான இடம் கிடைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !