அதிமுக., விலிருந்து இயக்குனர் ஆர்வி உதயகுமார் விலகல்
நடிகை கவுதமியை தொடர்ந்து திரைப்பட இயக்குனர் ஆர்வி உதயகுமார், அதிமுக.,வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
உரிமை கீதம் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் உதயகுமார். கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர். சமீபகாலமாக நடித்தும் வருகிறார். கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக.,வில் இருந்து வந்த இவர் இப்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் எழுதி உள்ள கடிதத்தில், ''25 ஆண்டுகளாக நான் அதிமுக.,வில் உறுப்பினராகவும், மாநில கலைப்பிரிவு செயலாளராகவும் உள்ளேன். கட்சியின் தற்போதைய நிலையால் ஆழ்ந்த வேதனையும், கவலையும் அடைந்துள்ளேன். தற்போதுள்ள சூழலில் கட்சியில் நான் தொடர விரும்பவில்லை. ஆதலால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மாநில கலைப்பிரிவு பதவியிலிருந்து விலகுகிறேன். இதுநாள் வரை எனது பணியில் துணை நின்ற அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடிகை கவுதமி, அதிமுக., கட்சியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.