சில உண்மை சம்பவங்களின் பாதிப்பில் 'ஓம்' : இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி
கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படங்களுக்குபின் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் ஓம். இதில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு விழா சென்னை, ஐடிசி சோழா ஸ்டார் ஓட்டலில் நடந்தது. ஆனால், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள், இசையமைப்பாளர் கலந்து கொள்ளவில்லை. இயக்குனர் மட்டுமே தலைப்பை வெளியிட்டு பேசினார்.
அவர் கூறியதாவது, '' 'ஓம் என்பது ஆன்மிக சம்பந்தப்பட்ட தலைப்பு மாதிரி தெரிந்தாலும் இது உணர்வுப்பூர்வமான கதை. இந்த படத்தை முன்பே ஆரம்பித்துவிட்டோம். 65 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டோம். தனுஷ் நடித்த படங்களில் இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் தயார் ஆகிறது. அதற்கு நடிகர்கள், கதைக்களம் என பல காரணங்கள். தவிர, சினிமா பிஸினசும் முன்பை விட அதிகரித்துள்ளது.
கார்த்திகேயன் என்ற கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி, அவர் கேரக்டர். மற்றவர்கள் கேரக்டர் விவரங்களை விரைவில் அறிவிப்போம். சூழ்நிலை காரணமாக மம்முட்டியை 6 மாதங்களாக என்னால் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் சென்னை வந்தவர் என்னிடம் கதை கேட்டார். சில சந்தேகம் கேட்டார். உடனே நடிக்க ஓகே சொல்லிவிட்டார். தனுஷ், மம்முட்டி என 2 பேரும் தேசிய விருது பெற்றவர்கள். அவர்கள் தங்கள் கேரக்டரை உணர்ந்து அழகாக நடித்தனர்.
ஸ்ரீலீலா சம்பந்தப்பட்ட காட்சிகளை இப்போது எடுத்து வருகிறேன். அவர் டான்சில் மட்டுமல்ல, நடிப்பிலும் சிறந்தவர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதியில் நடந்த செம்மரக் கடத்தல், என்கவுண்டர் சம்பந்தப்பட்ட கதையா என கேட்கிறார்கள். டீசரில் சில விஷயங்கள் காண்பித்து இருக்கிறோம். சில உண்மை சம்பவங்கள் பாதிப்பில் இந்த கதை உருவாகி இருக்கிறது.
நான் இயக்கிய அமரன் ஒரு பயோகிராபி, ஓம் இந்தவகை கதை. உண்மை சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால், அதை எப்படி திரைக்கதையாக கொடுக்கிறோம் என்பதில் வெற்றி இருக்கிறது. தமிழர்களை எந்த இடத்திலும் தவறாக காண்பிக்கவில்லை. திருவண்ணாமலைக்கும் கதைக்கும் தொடர்பு இருக்கிறது. தனுஷ் கேரக்டர் பெயர் அண்ணாமலையா என்பதை இப்போது சொல்ல முடியாது''என்றார்.