இளைஞரின் மண்டையை உடைத்த கயாடு லோஹர்
டிராகன் என்ற முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கயாடு லோஹர். தொடர்ந்து அதர்வா உடன் ‛இதயம் முரளி', ஜிவி பிரகாஷ் உடன் ‛இம்மார்டல்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மலையாள படங்களிலும் நடிப்பவர், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கும் ‛மஞ்சணத்தி', சூர்யாவின் 48வது படம் ஆகியவற்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது.
இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, ‛‛நான் 10வது படிக்கும் போது என் வீட்டருகே உள்ள டியூசனுக்கு சென்றேன். அங்கே ஒரு இளைஞர் ஈவ் டீசிங் தொல்லை தந்தார். முதல் இரு நாட்கள் அமைதியாக கடந்து சென்றுவிட்டேன். மூன்றாவது நாளும் அது தொடர்ந்ததால் கோபமாகி ஒரு கல்லை எடுத்து எறிந்ததில் அவனது மண்டை உடைந்து ரத்தம் வந்துவிட்டது. அங்கிருந்து உடனே சென்றுவிட்டேன். நான் அமைதியான பெண் தான். ஆனால் யாராவது தவறான காரியங்களை செய்யும்போது அமைதியாக இருக்க கூடாது, அதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்'' என்றார்.