உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெக்கை : இயக்குனர் வாழ்வில் நடந்த கதை

வெக்கை : இயக்குனர் வாழ்வில் நடந்த கதை

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் வெக்கை. இதில் அவர் ஜோடியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார், மலையாள நடிகர் ஸ்ரீநாத் பசி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சாய் தீனா, சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லட்சுமி பிரியா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்த படம் சாலைகளில் போக்குவரத்து விதிமீறலில், தவறாக வண்டி ஓட்டுதல், சின்ன சின்ன விபத்துகள் காரணமாக ஏற்படும் சண்டை எப்படியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது மாதிரியான கதை. அகிரன் மோசஸ் இயக்குகிறார்.

படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது : எனக்கு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளேன்.. ஒரு நாள் என் காதலியை பார்க்க காரில் சென்று கொண்டிருந்தேன் பின்னால் ஒருவன் விடாமல் ஹாரன் அடித்துக் கொண்டே தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். குறுகலான ரோடாக இருந்ததால், வழிவிட முடியவில்லை. என்னை ஓவர்டேக் செய்து முன்னால் வந்து திட்டிவிட்டான். அவன் வழக்கமான மெட்ராஸ் வார்த்தைகளில் திட்ட, நானும் திட்டி அடித்து விட்டேன். அவன் வாயிலிருந்து ரத்தம் வர எனக்குப் பரிதாபமாகிவிட்டது. பக்கத்தில் இருந்த சலூன் கடையில் முகத்தைப் பார்த்துவிட்டு வந்து 'உன்னை விட மாட்டேன்' என்று வண்டியை எடுத்துக்கொண்டு திரும்பினான். நான் அடித்தது ஒரு பெரிய விஐபியின் மகன். அதன் பிறகு நான் சந்தித்த பிரச்சினைகளுடன் கொஞ்சம் கற்பனையும் கலந்து உருவாக்கி உள்ளேன்.

தினமும் சண்டைகள் சாலையில் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஏன் சாலையில் ஒவ்வொருவரும் கொதித்து எழுகிறார்கள், நிமிடத்தில் காரசாரமாக வார்த்தைகள் வந்து விழுகின்றனவே எப்படி... போலீஸ் தரவுகளைத் தேடினால் நடந்த சம்பவங்கள், விளைவுகள் ஆச்சர்யப்படுத்துகின்றன. எல்லாமே மிகச்சிறிய விஷயங்களில் ஆரம்பிக்கின்றன. யாரும், யாரோடும் சண்டை போட வேண்டும் என்று புறப்படுவதில்லை. ஆனாலும் ஏன் இப்படி நிகழ்கிறது, ஏன் சாலைகளில் இவ்வளவு அழுத்தமாக இருக்கிறோம் எனத் தேடினால் அவ்வளவு சுவாரஸ்யமான சம்பவங்கள், மனித மனங்களின் விநோதங்கள் காணக் கிடைக்கின்றன. அவைதான் கதைக்களம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !