26 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் ஹிந்தி நடிகர் நஸ்ருதீன் ஷா
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் கர. கடந்த ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வந்த அப்படம் பாக்ஸ் ஆபீஸில் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது . அதையடுத்து தற்போது அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ஓம் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடிக்க, சாய் பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஓம் படத்தில் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமியுடன் நஸ்ருதீன் ஷா இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.
இவர் இதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கமல்ஹாசன் இயக்கி, நடித்த தமிழ், ஹிந்தியில் வெளியான ஹேராம் படத்தில் மகாத்மா காந்தியாக நடித்திருந்தார். அதன்பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காத இவர் 26 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனுஷின் ஓம் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். அதேபோல் மலையாளத்தில் 32 ஆண்டுகளுக்கு முன்பு பொந்தன் மாட என்ற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த நஸ்ருதீன் ஷா மீண்டும் இப்படத்தில் அவருடன் இணைகிறார்.