ஜானகிக்கு லண்டன் நிகழ்ச்சியில் இளையராஜா அஞ்சலி
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயதுமூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் மைசூரில் நேற்று காலமானார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜா வருகைக்கு பின் அவரது படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். அவரது மறைவு இளையராஜாவையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஐரோப்பா நாடுகளில் இசை நிகழ்ச்சிகளில் இளையராஜா பங்கேற்று வருகிறார். லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஜானகிக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்.
அந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது, ''எஸ்.ஜானகி இறைவனடி சேர்ந்துவிட்டார். அவர் உழைப்பு அதிகம். என்னுடைய 50 ஆண்டு இசை பயணத்தில் அவரோடு நிறைய பாடல்களில் பணியாற்றி இருக்கிறேன். அவர் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருக்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துங்கள்'' என்றார்.
வீடியோவில் உருக்கம்
இந்த நிலையில், இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “மதிப்பிற்குரிய பாடகி ஜானகி அம்மா காலமான செய்தி கேட்டு மிகவும் துக்கமடைந்தேன். மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி. தன்னுடைய சொந்த வாழ்வில் தாங்கமுடியாத துக்கங்களையும், தாங்க முடியாத நிகழ்வுகளை தாங்கி அவர் வாழ்ந்தார் என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.
உலக கம்போஸர்கள், மாமேதைகளின் தனிப்பட்ட வாழ்க்கை துக்கமானதாக இருந்திருக்கிறது என்பது தான் இதுவரை நடந்துள்ளது. ஜானகி தன்னுடைய திறமையில் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை ஒவ்வொரு பாடலிலும் நிரூபித்துள்ளார். மிகவும் கடுமையான உழைப்பாளி அவர். நான் நினைத்ததை விடாப்படியாக பாடலில் வருவதற்கு உழைப்பேனோ, எனக்கு நிகராக கடின உழைப்பு செலுத்து அந்தப் பாட்டை செம்மைபடுத்துவார். எனக்கும் மேல் என்றே சொல்லலாம். அவருடைய இழப்பு, இந்திய சங்கீத உலகிற்கு பெரிய இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.