மம்முட்டி கிரீன் சிக்னல் ; 'கண்ணூர் ஸ்குவாட்' பார்ட் 2 உறுதி
2023ல் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான படம் 'கண்ணூர் ஸ்குவாட்'. ஒளிப்பதிவாளரும் அறிமுக இயக்குனருமான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கேரளாவில் குற்றம் செய்துவிட்டு வட மாநிலங்களுக்குச் சென்று ஒளிந்து கொண்ட ஒரு குற்றவாளியைத் தேடி, ஒரு போலீஸ் அதிகாரி தனது சகாக்கள் சிலருடன் நடத்தும் தேடுதல் வேட்டையாக இந்தப் படம் உருவாகி இருந்தது. மிகப்பெரிய வெற்றியை இந்தப் படம் பெற்றது. இதை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கு கதை எழுதிய ரோனி டேவிட் ராஜ், இந்த இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இது குறித்து படத்தின் நாயகன் மம்முட்டியிடமும் பேசிவிட்டோம். தற்போது மம்முட்டியும் சரி, இயக்குனரும் சரி வெவ்வேறு படங்களில் பிஸியாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் தங்களது தற்போதைய படப்பிடிப்புப் பணிகளை முடித்துவிட்டுத் திரும்பிய பிறகு, இந்த இரண்டாம் பாகத்திற்கான அடுத்தகட்டப் பணிகள் துவங்க இருக்கின்றன என்று கூறியுள்ளார்.