பிளாஷ்பேக்: இயக்குநர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் அவர்களோடு இணைந்து பயணித்தவர் சேடப்பட்டி சூர்யநாராயணன் தேவர் ராஜேந்திரன் என்கிற எஸ்.எஸ்.ஆர். 1950கள், 60களில் தமிழ்த் திரையுலகில் தனது அழகு, அழுத்தம் திருத்தமான உச்சரிப்பு ஆகியவற்றால் புகழ்பெற்று விளங்கினார். சுமார் 85 படங்களில் நடித்தார். இவர் நடித்த 'பூம்புகார், மறக்க முடியுமா' போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றன. தூய தமிழ் பேசி நடித்ததாலும், திராவிட கொள்கைகளை ஏற்று அதன் காரணமாக புராண மற்றும் பக்தி படங்களில் நடிக்க மறுத்ததாலும் 'லட்சிய நடிகர்' என்று அழைக்கப்பட்டார். சினிமாவிலும், அரசியலிலும் எம்ஜிஆருக்கு தோழராக இருந்தார்.
பெரும் நடிகராக புகழ்பெற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் 3 படங்களை இயக்கினார். 1990ம் ஆண்டு 'தங்கரத்தினம்' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். விஜயகுமாரி, தங்வேலு, எம்.என்.ராஜம், பிரேம் நசீர், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். கிராமத்து பெண்ணுக்கும், நகரத்து ஆணுக்குமான காதலை சொன்ன படம்.
1964ம் ஆண்டு 'அல்லி' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார், அவருடன் விஜயகுமாரி, சகஸ்ஹரநாமம், சவுகார் ஜானகி, அசோகன், புஷ்பலதா, நாகஷ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். இது ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை. அவரின் காதலி மீது திருட்டு குற்றச்சாட்டு வர அவரையும் கைது செய்து விசாரணை செய்வது மாதிரியான கதை.
1966ம் ஆண்டு 'மணிமகுடம்' என்ற படத்தை தயாரித்தார். இது சரித்திர படம், கருணாநிதி, கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். அவரே இயக்கி நடித்த இந்தப் படத்தில் அவருடன் விஜயகுமாரி, ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், மனோரமா உள்ளிட்டோர் நடித்தனர்.
3 படங்களிலுமே அவரது மனைவி விஜயகுமாரி அவரது ஜோடியாக நடித்தார். மூன்று படங்களுமே வெற்றிபெறவில்லை. எனவே அதன் பிறகு அவர் படம் இயக்கவில்லை.