மா இன்ட்டி பங்காரம் 100 கோடி வசூல் : தியேட்டர் உரிமையாளருக்கு சமந்தா நெத்தியடி பதில்
சமந்தா நடிப்பில் வெளியான ‛மா இன்ட்டி பங்காரம்' படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர். இதன் வெற்றியைத் தொடர்ந்து, படத்தின் ரிலீசுக்கு முன்பு நடந்த ஒரு சுவாரசியமான மற்றும் கசப்பான சம்பவத்தைச் சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பு, பி மற்றும் சி சென்டர் தியேட்டர் உரிமையாளர் ஒருவரிடம், என் நண்பர் மூலமாக இந்தப் படம் குறித்து ஒரு கருத்தை நான் கேட்க சொன்னேன் என்பது அந்த உரிமையாளருக்குத் தெரியாது.
என் நண்பர் அவரிடம், மா இன்ட்டி பங்காரம் படம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது எவ்வளவு வசூலுடன் தொடங்கும் என நம்புகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்தத் தியேட்டர் உரிமையாளர், ஒரு கதாநாயகி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை யார் பார்ப்பார்கள்? அவர் ஒரு பெரிய ஹீரோவின் படத்தில் நடித்தால் வேண்டுமானால் பார்க்கலாம். மக்கள் அவரை அவரது கவர்ச்சிக்காகவே அறிவார்கள். ஆனால், ஒரு கதாநாயகி மட்டுமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தால் தியேட்டருக்கு யார் வருவார்கள்? யாருமே வரமாட்டார்கள் என்று அலட்சியமாகக் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது அப்படம் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ள நிலையில், அந்த உரிமையாளருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
இப்போது இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருப்பது, ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அடுத்த முறை யாராவது ஒரு பி அல்லது சி சென்டர் தியேட்டர் ஓனரை அழைத்து, பெண் கதாநாயகியை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் பற்றிக் கேட்டால், அதற்கான பதில் உடனடியாக 'முடியாது, ஓடாது' என்று இருக்காது என நம்புகிறேன். ஒருவேளை அந்த பதில், பார்க்கலாம், ஓடினாலும் ஓடும் என்பதாக மாறலாம். ஏனென்றால், பெண்களால் என்ன முடியும் என்ற உண்மை, முயற்சி செய்யாதவரை யாருக்கும் முழுமையாகத் தெரியப்போவதில்லை என்று சமந்தா பதிவிட்டுள்ளார்.
‛மா இன்ட்டி பங்காரம்' தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியானது. தெலுங்கு தவிர்த்து மற்ற மொழிகளில் இந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்தது. ஆனால் தெலுங்கில் சூப்பர் ஓட்டம் ஓடி வெற்றி பெற்றுள்ளது.