அறுவை சிகிச்சை முடிந்த கையோடு கோவை ஐயப்பன் கோயில் தரிசனம் செய்த ராம்சரண்
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 'பெத்தி' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ராம்சரணுக்கு கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சைக்காக அட்மிட் ஆனார் ராம்சரண். கோவையில் உள்ள மருத்துவருடன் அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்த சர்வதேச மணிக்கட்டு அறுவை சிகிச்சை நிபுணரும் இணைந்து ராம்சரணுக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ராம்சரண், தன் மனைவி உபாசனாவை அழைத்துக்கொண்டு கோவையில் உள்ள ஐயப்பன் சுவாமி கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்குத் திரும்பி சில வாரங்கள் ஓய்வு எடுத்த பிறகு தனது அடுத்த படத்திற்கான வேலையைத் தொடங்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.