பிளாஷ்பேக் : பாலிவுட் நடிகையாக உயர்ந்த குரூப் டான்சர்
சிவாஜி கணேசன் உடன் 'மருத நாட்டு வீரன்' படத்தில் நடித்தவர் கே.வி.சாந்தி. பெண் குலத்தின் பொன் விளக்கு, எல்லாம் உனக்காக, ஆடிப்பெருக்கு, உலகம் சிரிக்கிறது, மின்னுவதெல்லாம் பொன்னல்ல உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தென்னிந்திய சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பின்னர் பாலிவுட் சென்று சோரி சோரி, ராஜ்குமார் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
பிறந்தது கேரள மாநிலம் கோட்டயம். இவரது தந்தை சென்னையில் வியாபாரம் செய்து வந்ததனால் குடும்பத்தையும் சென்னைக்கு மாற்றினார். கோடம்பாக்கத்தில் வீடு கட்டி அங்கு குடியேறியது இவரது குடும்பம். இவர் ஆரம்பத்தில் குரு கோவிந்தன் என்பவரிடம் 4 வருடங்கள் நடனம் பயின்றார். பின்னர் ராகவன் என்ற மாஸ்டரிடம் நாட்டியம் பயின்றார். 4 வருடங்கள் அவரது நடனக்குழுவில் இணைந்து திரைப்படங்களில் நடனம் ஆடினார்.
இவரது நடனத்தை கவனித்து வந்த தயாரிப்பு நிர்வாகி ஒருவர் தான் பணியாற்றிய மெரிலாண்ட் ஸ்டூடியோ அப்போது தயாரிக்கவிருந்த “பாடாத்த பைங்கிளி “ என்ற படத்திற்கு ஒரு புது முகத்தைத் தேடிய போது இவரை அணுகி இவரது விருப்பத்தைக் கேட்க இவரும் ஒத்துக் கொள்ள அப்படத்தில் 1957ம் ஆண்டு முதன் முதலாக நடித்தார். அப்போது அவரது வயது 17. அதிலிருந்து மெரிலாண்ட் ஸ்டூடியோவின் நிரந்தர நடிகையானார்.