பிளாஷ்பேக் : எம்ஜிஆரை திருடனாக்கிய சின்ன அண்ணாமலை
மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் முக்கியமானவர் தயாரிப்பாளர் சின்ன அண்ணாமலை. சரித்திரப் படங்களில் வாள் வீசிக் கொண்டிருந்த எம்ஜிஆர் சமூகப் படங்களில் நடிக்க வைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். எம்ஜிஆர் நடித்த 'சக்கரவர்த்தி திருமகள்' படத்தில் நிர்வாக தயாரிப்பாளராக சின்ன அண்ணாமலை பணியாற்றி வந்தார். அப்போது ஒரு நாள் படப்பிடிப்பின் இடைவெளியில் சமூகக் கதைகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்ட இந்தக் காலத்தில், இன்னும் நீங்கள் வாள் வீசிச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்களே? நீங்கள் வாளைத் தூக்கியெறிந்துவிட்டு சமூகத்தின் பக்கம் திரும்ப வேண்டும்' என்றார்.
அதற்கு எம்.ஜி.ஆர்., “கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால், நல்ல சமூகக் கதை கிடைக்க வேண்டும். ஆனால் எனது படத்தின் சிறப்பே சண்டை காட்சிகள்தான் சமூகப் படத்தில் சண்டை காட்சிகள் இருக்காது. இதனால் எனது ரசிகர்கள் ஏமாந்து போக வாய்ப்பு உள்ளது. அதோடு சமூக படங்களில் நீண்ட தலைமுடியுடன் நடிப்பது நன்றாக இருக்காது. எனக்கு கிராப் வெட்டினால் ரசிக்க மாட்டார்கள்என்றார்.
உடனே சின்ன அண்ணமலை, தான் கொண்டுபோயிருந்த பையிலிருந்து ஓவியம் ஒன்றே எம்ஜிஆர் இடம் கொடுத்தார் அதைப் பார்த்து எம்ஜிஆர் அதிர்ச்சி அடைந்தார். எம்.ஜி.ஆர். மாடர்ன் கிராப் வெட்டியிருப்பது போலவும், கோட் சூட் அணிந்திருப்பதுபோலவும் ஓவியர் வரைந்திருந்தார்.எம்.ஜி.ஆர். வியந்து போனார். சமூகப் படத்தில் நடிக்க அவர் மனதளவில் தயாராக ஆனால் கதை வேண்டுமே என்று கேட்டார்.
தேவ் ஆனந்த் நடித்த 'பாக்கெட் மார்' இந்திப் படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறேன். திரைக்கதையும் தயார். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்' என்றார். படத்தைப் பார்த்த எம்ஜிஆருக்கு படம் மிகவும் பிடித்து விடவே நடிக்க ஒப்புக்கொண்டார்.
எம்ஜிஆர் நடிக்க வந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் 'திருடாதே'. சரித்திர படங்களில் 'நாடோடி மன்னன்' பெரிய விருப்பத்தை கொடுத்தது போன்று சமூகப் படங்களில் எம்ஜிஆருக்கு பெரிய திருப்தி கொடுத்த படம் 'திருடாதே'. படத்தில் எம்ஜிஆர் திருடராக நடித்ததை கூட ரசிகர்கள் ஏற்று படத்தை வெற்றி பெற வைத்தார்கள்.