உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மக்கள் காவலன்' படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறுகிறார் மணிகண்டன்

'மக்கள் காவலன்' படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறுகிறார் மணிகண்டன்


'குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' ஆகிய வெற்றி படங்களுக்குபின் மணிகண்டன் மார்க்கெட் எகிறி உள்ளது. அவருக்காக படம் தயாரிக்கவும், அவரை வைத்து படம் இயக்கவும் பலர் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்த படமாக வருகிறது 'மக்கள் காவலன்'. பொதுவாக ஆக்ஷன் படங்கள் பண்ணினால்தான் ஒரு ஹீரோ அடுத் நிலைக்கு போக முடியும் என்பார்கள். விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு போன்றவர்கள் அப்படி முடிவெடுத்தார்கள்.

மணிகண்டனும் முதல் முறையாக முழுநீள ஆக்ஷன் டிராமாவில் உருவாகும் இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். கண்ணியமாக வாழ வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருக்கும் ஒரு சாதாரண மனிதனின் கதையைச் சொல்கிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு, அவனுக்கு சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இரண்டு வழிகளையே விட்டுச் செல்கிறது. ஒருவரின் உயிர்வாழ்வுக்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தப் பயணம், அவர் விரும்பாமலேயே மக்களின் தலைவராக மாறும் அளவுக்கு வளர்கிறது. போராட்டம் தீவிரமடையும்போது அதன் விலையும் அதிகரிக்கிறது. இறுதியில், ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையேயான எல்லை மெதுவாக மறைந்து விடுகிறது என செல்கிறதாம்.

வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர் உட்பட பலர் நடிக்கிறார்கள். “மக்கள் காவலன் என்பது கலாசார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்ஷன் டிராமா. இந்தக் கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாக சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி” என்கிறார் மணிகண்டன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !