உள்ளூர் செய்திகள்

/ சினிமா / விமர்சனம் / பாலன் தி பாய்

பாலன் தி பாய்

தயாரிப்பு : அஜயன் சல்லிச்சேரி
இயக்கம் : சிதம்பரம்
நடிப்பு : பர்சானா பலதிங்கல், ஆதிசேஷன்.கே.ஆர், ஜினன், ஜீன் பால் லால், கிரிஷ் ஏ.டி
இசை : சுஷின் ஷ்யாம்
ஒளிப்பதிவு : ஷைஜூ காலித்
வெளியான நாள் : 19.06.26
ஓடும் நேரம் : 2 மணி 27 நிமிடங்கள்
ரேட்டிங் : 2.75 / 5

ஆவேசம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் கதையில், மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படைப்பாக வெளியாகி இருக்கிறது இந்த பாலன்.

சிறையில் தனது சிறுவயது மகன் ஆதிசேஷனுடன் தண்டனை கைதியாக இருக்கும் பர்சானா, அங்கிருக்கும் விபச்சார பெண் தலைவி ஒருவரின் சிபாரிசால் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார். ஆனால் தன்னுடைய மற்றும் மகனுடைய பெயர் அடையாளங்களை மாற்றி மாற்றி கூறி, எந்த ஒரு இடத்திலும் நிரந்தரமாக வேலை பார்க்காமல், தங்காமல், இடம் மாறிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் கிராமத்தில் ஒதுக்குப்புறமாக இருக்கும் வயதான ஒரு பாட்டிக்கு உதவியாக வேலைக்கு சேரும் பர்சானா, மகனையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்.

ஒரு பக்கம் பாட்டி திடீரென இறந்துவிட, அந்த உண்மையை வெளிநாட்டில் இருக்கும் அவரது மகனிடமிருந்து மறைக்கிறார் பர்சானா. இன்னொரு பக்கம் ஜெயிலில் இருந்து ரிலீஸாகும், விபச்சார விடுதி தலைவி, பர்சானாவை தேடி கண்டுபிடித்து வீட்டுக்கே வந்து அவரை விபச்சாரத்திற்குள் தள்ள முயற்சிக்கிறார். அந்தசமயத்தில் பாட்டியின் மகனும் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருகிறார். இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க பர்சானா எடுக்கும் திடீர் முடிவு அவரையும் அவரது மகனையும் எந்த மாதிரி பாதிக்கிறது என்பது மீதிக் கதை.

தாய், மகன் என இரண்டு கதாபாத்திரங்களை வைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார்கள். தனக்கென ஒரு பெயரை நிலையாக வைத்துக் கொள்ளாமல், அவ்வப்போது பெயரை மாற்றும் அந்த முதல் இரண்டு காட்சிகளிலேயே அந்த கதாபாத்திரத்தின் மனநிலையை, குணாதிசயத்தை தெளிவாக வெளிப்படுத்தி விடுகிறார் பர்சானா. தான் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை ஒரு கதை போல சிறுவயது மகனுக்கு மனதில் பதிய வைத்து, போகும் இடம் எல்லாம் நாடகம் ஆடும் அவரைப் பார்க்கும்போது, இதுவரை நாம் பார்த்திராத அல்லது கேள்விப்பட்டிராத ஒரு கதாபாத்திரமாக நம்மை தனது நடிப்பால் ஆச்சரியப்படுத்துகிறார் பர்சானா..

அவரது மகனாக சிறுவயது பாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதிசேஷன் என்கிற அந்த சிறுவன், வெள்ளந்தியான நடிப்பால் படம் பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கிறான். ஒன்றுமே புரியாத வயது என்றாலும் கூட, தாய் சொல்லை தட்டாத பிள்ளையாக 'அடுத்து நாம என்னம்மா செய்ய போகிறோம் என கேட்டு நம்மை ரொம்பவே ஆச்சரியப்படுத்துகிறான். வளர்ந்து இளைஞனாக மாறிய பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜினன் கூட தனது தாயை பிரிந்த ஏக்கத்தை, கோபத்தை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

போலீஸ் ஏட்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் ஜீன் பால் லால் தனது மென்மையான வில்லத்தனத்தால் யார் இவர் என கேட்க வைக்கிறார்.. தன்னை ஏமாற்றிவிட்டு காணாமல் போன ஒரு சிறுவன் மீது இந்த அளவிற்கு ஒரு போலீசால் வன்மம் வைக்க முடியுமா என்பது இவரது கதாபாத்திரத்தை பார்க்கும்போது தான் தெரிகிறது..

நேர்மையாக நடக்க முயற்சிக்கும் சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் கிரீஷ் ஏ.டி.(பிரேமலு இயக்குனர்) ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் இப்படி ஒருத்தர் இருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தை ஏற்படுத்துகிறார்..

கொஞ்ச நேரமே வந்தாலும் தனது அதிரடி நடவடிக்கைகளால் நாயகி மற்றும் அவரது மகனை மட்டும் அல்ல, நம்மையும் அதிர வைக்கிறார் அந்த வயதான பாட்டி. அவர் செய்யும் விஷயங்கள் எல்லாமே திக் திக் ரகம் தான்.

இடைவேளைக்குப் பிறகு ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் ரவுடியாக வரும் டொவினோ தாமஸ் கதாபாத்திரம் நட்புக்காக சேர்க்கப்பட்டிருக்கிறது. அவரது நடிப்பு ஓகே என்றாலும் கூட, இதற்கு எதற்கு டொவினோ தாமஸ் என கேட்க வைக்கிறது..

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் தாய், மகன் சம்பந்தப்பட்ட காட்சிகளில் தனது, பின்னணி இசையால் தொடர்ந்து என்ன நடக்குமோ என்கிற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார்..

ஒளிப்பதிவாளர் ஷைஜூ காலித் கேரளாவின் உள்ளடங்கிய கிராமத்து அழகை, குறிப்பாக அந்த பாட்டி இருக்கும் வீட்டின் சுற்றுப்புற சூழலை, நாமே அந்த வீட்டில் வசிப்பது போன்ற உணர்வு ஏற்படும் விதமாக மிக நேர்த்தியாக படமாக்கியுள்ளார்.

மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் நட்பின் வலிமையை சொன்ன இயக்குனர் சிதம்பரம் இதில் தாய், மகன் இடையேயான பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்து இருக்கிறார். அதே சமயம் அந்த பெண் எதற்காக சிறைக்கு சென்றார், சிறையில் இருந்து திரும்பிய பிறகும் எதற்காக சில நல்ல வாய்ப்புகள் கூட கிடைத்தும் கூட நேர் வழியில் செல்ல விரும்பாமல், எந்நேரமும் குயுக்தியான சிந்தனை மற்றும் செயல்பாட்டிலேயே இருக்கிறார் என்பதற்கான காரணங்கள் தெளிவாக சொல்லப்படாதது மைனஸ்..

இடைவேளை வரை கதையின் மைய கதாபாத்திரமாக நடித்த அந்த பெண்ணுக்கு, இடைவேளைக்குப் பிறகு வெறுமனே கிளைமாக்ஸில் மட்டுமே தலைகாட்டும் அளவிற்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டு இருப்பதும், இடைவேளைக்குப் பிறகு கதை வேறு பாதையில் பயணிப்பதும் கூட பலவீனமான அம்சங்கள் தான் சிறுவன் தனது அம்மாவை கண்டுபிடிப்பதை இந்த அளவிற்கு சுற்றி வளைத்து சொல்லி இருக்க வேண்டாம்.

போலீஸ் ஸ்டேஷன் சம்பந்தப்பட்ட காட்சிகள் காமெடியாகவும், அதேசமயம் ரசிக்கத்தக்க வகையிலும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை பாராட்டலாம். இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் நிலையான, அதே சமயம் உண்மையான அடையாளம் ஒன்று தேவை என்பதை அழுத்தமாக சொன்னதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

பாலன் : தாய் சொல்லை தட்டாதே



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

சாதிக் ஐஷ்வா
2026-06-21 08:33:24

90% சரியாக மதிப்பிடும் தினமலர் விமர்சகர்..அவ்வப்போது சறுக்கிய தருணமும் உண்டு. இந்த 2.75 அப்படியானதே! நியாயபடி நிறைய ஊடகங்கள் தந்தது போல 4.25க்கு தகுதியான புது திரைமொழிபடம்! படத்தின் சிறப்பே ரசிகனை குழந்தையாக பாவித்து ஒவ்வொன்றையும் நீட்டி முழக்கி விவரிக்காமல்.. கூறியது கூறாமல் மட்டுமல்ல கூறவேண்டியதையும் கூறாமல் ரசிகனின் அறிவுக்கு யூகிக்க அனுமதித்த படக்காட்சிகள் குறித்து தினமலர் எழுப்பிய அத்தனை கேள்விகளும் சிறுபிள்ளைத்தனம்! ekko படம் போல பார்வையாளனின் ரசனை மேம்பாட்டுக்கு பயிற்சி படம் பார்த்துவிட்டு இத்தனை கேள்விகள் எழுப்பியது சிறுபிள்ளைத்தனம்!


Sakthivel Ramachandran Vadivel
2026-08-13 15:12:44

Eppadi, 5mins Kadhai vachikittu, 1.45hrs savadikkiratha?