மெட்ராஸ் டாக்கீஸ் பெயர் மாற்றமில்லை : நடிகை சுகாசினி விளக்கம்
இயக்குனர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் என்ற பட நிறுவனம் மூலமாக, பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இருவர் படம் தொடங்கி, அலைபாயுதே, ஆயுத எழுத்து, கடல், செக்கச்சிவந்த வானம், பொன்னியின் செல்வன், தக்லைப் உட்பட 22 படங்களை இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தில் மணிரத்னம் தவிர வசந்த், சுசி சுணேசன், அழகம் பெருமாள் உள்ளிட்ட சிலரும் படம் இயக்கி இருக்கிறார்கள்.
லைகா போன்ற நிறுவனத்துக்கு மணிரத்னம் படம் இயக்கினாலும், அந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து அல்லது பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படம் தயாரிப்பது அவர் வழக்கம். இப்போது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் 23வது படத்தை தயாரிக்க உள்ளது. மணிரத்னம் இயக்க விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கிறார்கள். மே 2வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. முன்னதாக படம் குறித்த முன்னோட்ட வீடியோ வெளியாகிறது. அதற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்துகிறார் மணிரத்னம்.
இந்நிலையில், இந்த படத்தை அவர் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துக்காக தயாரிக்கவில்லை. பல ஆண்டுகளுக்குபின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் பெயர் மாறுகிறது, இந்தியா டாக்கீஸ் என்ற அவரின் புது பட நிறுவனமே அந்த படத்தை தயாரிக்கிறது என்று தகவல்கள் வெளியாகின. பாரம்பரிய மிக்க மெட்ராஸ் டாக்கீஸ் பெயரை மாற்றுவது ஏன்? இந்தியளவில் மட்டுமல்ல, உலகளவில் அந்த பெயருக்கு தனி மரியாதை, பெயர் மாற்றம் சரியா என சமூகவலைதளங்களில் கேள்விகள் வந்தன.
இந்நிலையில், ''மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் அப்படியே இருக்கிறது. அந்த நிறுவனத்தின் பெயரை மாற்றவில்லை. இப்படி வரும் தகவல்கள் தவறு. அதேசமயம் இந்தியா டாக்கீஸ் என்பது எங்கள் நிறுவனம்தான்'' என்று மெட்ராஸ் டாக்கீஸ் பங்குதரரான நடிகை சுகாசினி விளக்கம் அளித்துள்ளார்.