'ஜெயிலர் 2' தொடர்பான வீடியோக்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை : தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை
விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் முழு காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரஜினி நடித்து வரும் 'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது 'ஜெயிலர்' படக் குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த வீடியோவை பதிவிட்டாலோ, பகிர்ந்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பு தரப்பில் இருந்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 'ஜெயிலர் 2' படப்பிடிப்புத் தளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு காணொளிக் காட்சி தற்போது சமூக ஊடகத் தளங்களில் பரவி வருவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
எங்கள் திருட்டு தடுப்புக் குழு இந்தச் சூழலைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மேலும், இந்தக் காணொளிக் காட்சிகளைப் பகிரும் அல்லது விளம்பரப்படுத்தும் சமூக வலைத்தள கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உட்பட, அத்தகைய உள்ளடக்கத்தை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
ஊடக மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளில் ஏற்படக்கூடிய தற்காலிகத் தடை அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்காக, இந்தக் காணொளியைப் பயன்படுத்துவதையோ, பகிர்வதையோ அல்லது மீண்டும் பதிவிடுவதையோ தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கோ அல்லது கணக்குகளை மீட்டெடுப்பதற்கோ தயாரிப்பு நிறுவனம் பொறுப்பேற்காது என்பதைத் தயவுசெய்து கவனத்தில் கொள்ளவும். உங்கள் புரிதலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.