கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி
கேரளாவில் உள்ள சில பல்கலைக் கழகங்கள் டி.லிட் என அழைக்கப்படும் கவுரவ முனைவர் பட்டத்தை வழங்கி வருகின்றன. இலக்கியம், கலை, கலாசாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் சிறந்த பங்களிப்பு ஆற்றும் கலைஞர்களுக்கு 'டி.லிட்' பட்டங்கள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.
கேரளாவில், கோட்டயம் நகரில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் திரைப்பட நடிகர் மம்முட்டிக்கு 'டி லிட்' பட்டம் வழங்கி கேரள கவர்னர் விஸ்வநாத் அர்லேக்கர் கவுரவித்துள்ளார்.
மம்முட்டி பெறும் மூன்றாவது டி.லிட் பட்டம் இது. இதற்கு முன்பு கேரள பல்கலைக்கழகம் மற்றும் காலிகட் பல்கலைக்கழகத்திலிருந்து அவர் இதைப் பெற்றுள்ளார்.
கவுரவ முனைவர் பட்டம் பெற்றது குறித்து மம்முட்டி, “இன்று மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்திடமிருந்து, கேரள மாநிலத்தின் மாண்புமிகு கவர்னர் அவர்களால் வழங்கப்பட்ட கவுரவ டி.லிட் பட்டத்தைப் பெற்றதில் நான் பெரிதும் நெகிழ்ந்துபோனேன்.
இந்த மறக்கமுடியாத பயணத்தின் நெடுகிலும் என் பக்கபலமாகத் துணை நின்ற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,” என மம்முட்டி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.