இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா?
முதல்வர் விஜய் நடித்து ஜனவரி 9ம் தேதி வர வேண்டிய ஜனநாயகன் படம் இன்னமும் வரவில்லை. ஒவ்வொருமுறையும் மறைமுகமாக ரிலீஸ் தேதி சொல்லப்படுகிறது. கடைசி நேரத்தில் அது ரத்தாகிறது. காரணம், படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இப்போது தமிழகத்தில் விஜயின் தவெக ஆட்சி அமைந்துவிட்டது. அதனால் பிரச்னைகள் தீர்ந்துவிடும். விரைவில் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும். ஜூன் 19ம் தேதி படம் ரிலீஸ். அடுத்த சில நாட்களில் முதல்வர் விஜய் பிறந்தநாள் என்பதால், அது பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று பேச்சு எழுந்துள்ளது.
சமீபத்தில் திருச்செந்துார் சென்று வழிபட்ட ஜனநாயகன் தயாரிப்பாளர் கே.வி. நாராயணனும் விரைவில் படம் ரிலீஸ். எந்த நேரத்திலும் சென்சார் சான்றிதழ் கிடைக்கலாம். அதற்கான முயற்சியில் இருக்கிறோம் என சொல்லியிருக்கிறார். இந்த முறையாவது சரியாக வருமா என விசாரித்தால், விரைவில் டில்லிக்கு பயணம் செய்கிறார் முதல்வர் விஜய். அப்போது பல அரசியல் தலைவர்களை சந்திக்கிறார். அதற்கு முன்னதாக, அல்லது அந்த சந்திப்புக்குபின் ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும். அதனால், ஜூன் 19ல் வெளியாக அதிக வாய்ப்பு என்கிறார்கள். அதேசமயம் மீண்டும் சிக்கல், பிரச்னைகள் வந்தால் அந்த தேதியிலும் வராது.