விஜயகாந்த் மகனை வம்பிழுத்த விருதுநகர் எம்எல்ஏ : வலுக்கும் கண்டனங்கள்
தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஒரு முக்கிய அடையாளத்தைக் கொடுத்த படம் 'செந்தூரபாண்டி'. விஜய்யின் அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திசேகர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்தப் படத்தில் நடித்த விஜயகாந்த் மூலமாக விஜய் பி அண்ட் சி ரசிகர்களிடமும் போய் சேர்ந்தார்.
விஜய் கடைசியாக நடித்து வெளிவந்த 'தி கோட்' படத்தில் கூட விஜயகாந்த்தை 'ஏஐ' மூலம் உருவாக்கி நடிக்க வைத்தார்கள். இந்நிலையில் விஜய் நடித்த 'ஜனநாயகன்' படத்தின் சிறப்புக் காட்சி விருதுநகரில் உள்ள ஒரு தியேட்டரில் நடந்துள்ளது. அந்தக் காட்சியில் விருதுநகர் தவெக எம்எல்ஏ செல்வம் படம் துவங்குவதற்கு முன்பாக வீடியோ ஒன்றைத் திரையிட வைத்துள்ளார்.
அதில் அந்தத் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தோல்வி குறித்தும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதைக் கேள்விப்பட்டு தேமுதிக தொண்டர்கள் தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் தலையிட்டு தேமுதிகவினரைக் கைது செய்தனர்.
இது குறித்து எம்எல்ஏ செல்வம், தனது கவனத்திற்கு வராமல் யாரோ சிலர் இதை செய்துள்ளார்கள். விஜய பிரபாகரன் அண்ணனுக்கோ, அவர்களது கட்சிக்கோ எதிரான எந்த எண்ணமும் இல்லை என்று பேசியிருக்கிறார்.
இருந்தாலும் அந்த தியேட்டர் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி விஜயகாந்த் ரசிகர்களிடமும், அவர்களது கட்சியினரிடமும் கடும் கண்டனத்தைப் பெற்று வருகிறது.