உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் - 300 கோடி கடந்தும்……

ஜனநாயகன் - 300 கோடி கடந்தும்……


தமிழக முதல்வர் ஆக விஜய் பதவியேற்ற பின் வெளிவந்த 'ஜனநாயகன்' படம் வசூலில் பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் 'தி கோட்' படத்தின் வசூலைக் கடந்தால் அதுவே பெரிய விஷயம் என்று சொல்லப்படுகிறது.

'ஜனநாயகன்' படம் தற்போது 300 கோடி வசூலைக் கடந்து ஓடி வருகிறது. இன்றுடன் படம் வெளிவந்து இரண்டு வாரங்களாகிறது. விஜய் நடித்து வெளிவந்த சமீபத்திய படங்களில் மிகச் சுமாரான வசூல் இது என்று கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

முதல்வர் ஆன பின்பு வந்த படம் என்பதால் 'லியோ' வசூலையும் தாண்டி புதிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். 300 கோடி வசூலைக் கடந்தும் படம் லாபத்தைப் பார்க்க இன்னும் சுமார் 60 கோடிக்கு மேல் பங்குத் தொகை வர வேண்டும் என்கிறார்கள். அவ்வளவு தொகை வசூலிக்க இன்னும் 100 கோடி வசூல் தேவைப்படுகிறது.

இதர மாநிலங்களைப் பொறுத்தவரையில் கர்நாடகாவில் மட்டும் 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கிறதாம். கேரளாவில் 16 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 13 கோடி, ஹிந்தியில் 22 கோடி, வெளிநாட்டு வசூல் 92 கோடி என இப்படத்தில் வசூல் இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சூர்யாவின் 'கருப்பு' படம் 340 கோடி வசூலைக் கடந்து இந்த ஆண்டின் அதிக வசூல் படங்களில் முதலிடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !