பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நவீன கால வரலாற்று படங்கள்
நவீன தொழில்நுட்பம், விஎப்எக்ஸ் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு செலவுகளுடன் உருவாகும் வரலாற்றுத் திரைப்படங்கள், தற்போது உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகின்றன. நேரடித் தமிழ் படங்கள் மட்டுமின்றி, தமிழில் வெளியாகி தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வசூலைக் குவித்த தென்னிந்திய பிரம்மாண்ட வரலாற்றுப் படங்களும் இதில் அடங்கும். நவீன கால இந்திய மற்றும் தமிழ் சினிமாவில் வெளி வந்து மிகப்பெரிய வசூல், விமர்சன வரவேற்பு மற்றும் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்திய வரலாற்று மற்றும் காலகட்ட திரைப்படங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
1. பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2
டைரக்டர் மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான படங்கள். இது மணிரத்னத்தின் கனவு படம் என்றே சொல்லப்படுகிறது. அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் உலகப்புகழ் பெற்ற சோழர் வரலாற்று நாவலை திரைப்படமாக உருவாக்கி இருந்தனர். 10ம் நூற்றாண்டின் சோழ பேரரசின் அரசியல் சூழ்ச்சிகள், சுந்தர சோழரின் அரியணைக்கான போட்டி மற்றும் வந்தியத்தேவனின் சாகசப் பயணங்களை விவரிக்கிறது. நாவலாக படிக்கும் போது பலரும் இந்த கதையை வியந்துள்ளனர். இதை சினிமாவாக எடுக்கிறார்கள் என்றதும், இந்த காட்சிகளை எல்லாம் எப்படி சினிமா காட்சியாக கொண்டு வர முடியும்? என்று தான் பலரும் ஆச்சரியத்துடன் கேட்டனர். ஆனால் ரவி வர்மனின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் பிரம்மாண்ட கலை இயக்கம் மற்றும் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி ஆகியோரின் நடிப்பு ஆகியவை இதை சாத்தியமாக்கியது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து. இரண்டு பாகங்களும் சேர்த்து உலகளவில் ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்தது.
2. பாகுபலி 1 மற்றும் 2
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில், எம்.எம்.கீரவாணி இசையில் உருவான படங்கள். மகிழ்மதி என்ற கற்பனை ராஜ்யத்தில் அரியணைக்காக இரு சகோதரர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் மற்றும் பழிவாங்கும் கதை. கற்பனையான கதை என்றாலும் நிஜமாக வரலாற்றில் நடந்த ஒரு கதையாகவே மக்கள் இதை பார்த்தனர். அதிலும் பழங்கால போர் நுணுக்கங்களை இந்த கால தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், பிரம்மாண்டத்தின் உச்சமாக இந்த படத்தை உருவாக்கி இருந்தனர். அதிநவீன VFX கணினி வரைபடத் தொழில்நுட்பம், பிரம்மாண்ட போர்க்களக் காட்சிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பின்னணி இசை ஆகியவை இந்த படத்தின் தனி சிறப்பம்சம் என்றே சொல்லலாம். இந்திய சினிமாவின் எல்லையை உலகளவில் விரிவுபடுத்தி, இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ.2,400 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது.
3. ஆர்.ஆர்.ஆர்
எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில், எம்.எம்.கீரவாணி இசையமைத்த படம். 1920-களின் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோர் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற வரலாற்றுப் புனைவு கதையாக இந்த படத்தை அமைத்திருந்தனர். தேசப்பற்றுமிக்க அக்கால இளைஞர்களின் உணர்வுகளை அப்படியே கண்முன் காட்டி இருந்தனர். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் அதிரடி நடிப்பு, பிரம்மாண்ட இடைவேளைக் காட்சி மற்றும் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் ஆகியவை இந்த படத்தின் சிறப்பம்சங்கள். உலகளவில் ரூ.1,200 கோடிக்கும் மேல் வசூலித்ததோடு, இதன் நாட்டு நாட்டு பாடலுக்குச் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதும் கிடைத்தது.
4. இம்சை அரசன் 23ம் புலிகேசி
சிம்புதேவன் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் உருவான படம். 18ம் நூற்றாண்டின் வரலாற்று பின்னணியில், ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிக்கு இரையாகும் ஒரு சோம்பேறி மன்னனையும், அவனது வீரமிக்க இரட்டைச் சகோதரனையும் பற்றிய வரலாற்று நகைச்சுவைப் புனைவு கதையாக இந்த படத்தை உருவாக்கி இருந்தனர். வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பு, வரலாற்றுத் திரைப்படங்களுக்கே உரிய கம்பீர வசனங்கள் மற்றும் நகைச்சுவை படத்தின் மிகப் பெரிய ப்ளஸ். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது.
5. கே.ஜி.எப்
பிரசாந்த் நீல் இயக்கத்தில், ரவி பஸ்ரூர் இசையமைத்த படம். 1970-80-களின் காலகட்டத்தில் கர்நாடகாவின் கோலார் தங்க வயலை (Kolar Gold Fields) மையமாகக் கொண்டு நடக்கும் ஒரு ரவுடியின் சாம்ராஜ்ய வளர்ச்சி தான் படத்தின் கதை. யஷின் மாஸ் நடிப்பு, அட்டகாசமான மேக்கிங் மற்றும் கலர் டோன் ஆகியவை இந்த படத்தை உலகத்தரமான படைப்பாக மாற்றியது. இரண்டு பாகங்களும் சேர்த்து ரூ.1,700 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய அளவில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது.
6. காந்தாரா 1 மற்றும் 2
ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் கன்னடத்தில் உருவாகி பிற மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‛காந்தாரா 1 மற்றும் காந்தாரா 2'. பழங்குடி மக்களின் நில உரிமையும், அவர்களின் தெய்வ நம்பிக்கையும் பற்றி பேசியது முதல்பாகம். இரண்டாம் பாகம், 'காந்தாரா' படத்தின் முன்கதையாக வெளியானது. பாங்ரா தேச அரசன் காந்தாராவை கைப்பற்ற நினைக்கிறார். அங்குள்ள மக்களை தந்திரமாக அழித்து, அந்த தெய்வீக சக்தியை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். தங்களின் குல தெய்வமான குலிகா மற்றும் சிவன் சக்தி உதவியுடன் ஹீரோ எப்படி காந்தாராவை காப்பாற்றுகிறார் என்கிற கதை. முதல்பாகம் ரூ.400 கோடிக்கு அதிகமாகவும், இரண்டாம் பாகம் ரூ.900 கோடி வசூலையும் குவித்தது.
7. கல்கி 2898 ஏடி
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான படம் இது. மகாபாரதப் போரின் முடிவில் இருந்து 6000 ஆண்டுகளுக்குப் பிறகு (2898 கி.பி) நடக்கும் அறிவியல் புனைகதை மற்றும் புராணக் கலப்புப் படமாக வெளியானது. தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியாகி 1000 கோடி வசூலை ஈட்டி தந்த படமாக அமைந்தது. அமிதாப் பச்சன், பிரபாஸ் இடையேயான சண்டைக்காட்சிகள், பிரமிக்க வைத்த விஎப்எக்ஸ் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது. இதில் கமல் வில்லனாக நடித்திருந்தது ஹைலைட்.
8. பழசிராஜா
மலையாளத்தில் ஹரிஹரன் இயக்கத்தில் மம்முட்டி, சரத்குமார், கனிகா உள்ளிட்டோர் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளியான படம் இது. 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வீரத்துடன் போராடிய கோட்டயம் மன்னர் பழசிராஜாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஒரு காவிய திரைப்படமாகும். எம்.டி. வாசுதேவன் நாயர் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றது. இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.