'ராக்கா' படப்பிடிப்பை நிறைவு செய்யும் தீபிகா படுகோனே
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. கர்நாடகாவைச் சேர்ந்த தீபிகா ஹிந்திப் படங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வமாக இருந்தார்.
'கல்கி 2898 ஏடி' படத்தின் முதல் பாகத்தில் நடித்தார். ஆனால், அதன் இரண்டாவது பாகத்தில் நடிப்பதிலிருந்து விலகினார். இருந்தாலும் 'ராக்கா' படக்குழு தீபிகாவைத் தங்களது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது.
தீபிகா தற்போது இரண்டாவது முறையாக தாய்மை அடைந்துள்ளார். அதற்காக விரைவில் அவர் முழு ஓய்வு எடுக்க உள்ளார். எனவே, தற்போது நடித்து வரும் 'ராக்கா' படப்பிடிப்பை முடிக்க தீவிரம் காட்டினார். அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு இந்த வாரத்தில் ஏற்கெனவே ஆரம்பமாகி உள்ளது. இன்னும் சில நாட்களில் அது முடிவடைய உள்ளதாம்.
மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்கிறார்கள். அதன்பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்களாம்.