பிளாஷ்பேக்: எம் எஸ் விஸ்வநாதன், கண்ணதாசன், பாலசந்தர் கூட்டணியில் வந்த முதல் திரைப்படம்
பொற்கால தமிழ் சினிமாக்களைக் கொண்டாடி மகிழ்ந்த 1960களின் மத்தியில், நாடகத் துறையிலிருந்து சினிமா உலகிற்கு ஒரு நேரடி இயக்குநராக அறிமுகமாகி, வித்தியாசமான கதைக் களங்களைக் கொண்ட கலைப் படைப்புகளைத் தந்ததன் மூலம், பிற இயக்குனர்களிடமிருந்து ஒரு தனித்துவமிக்க இயக்குநராக அடையாளம் காணப்பட்டு, திரையுலகில் தனக்கான ஒரு தனி பாணியை உருவாக்கி உயர்வு பெற்றவர்தான் இயக்குநர் கே பாலசந்தர்.
ஸ்ரீதர், ஏ பீம்சிங், ஏ பி நாகராஜன், ப நீலகண்டன், கே சங்கர் போன்ற ஜாம்பவான் இயக்குனர்கள் கோலோச்சியிருந்த இந்த காலகட்டங்களில் அவரவருக்கென படைப்பாற்றலில் ஒரு தனித்தன்மை இருந்தது போல், தொழில்நுட்ப வல்லுனர் குழுவும் ஒவ்வொரு இயக்குநருக்கும் அவரவர் விருப்பப்படியே இருந்தும் வந்தது. உதாரணத்திற்கு இயக்குநர் ஸ்ரீதரின் திரைப்படம் என்றால், இசையமைப்பாளர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயர்களையும் விளம்பரங்களைப் பார்க்காமலேயே ஒவ்வொரு சினிமா ரசிகனாலும் எளிதாக யூகிக்கக் கூடியதாகவே இருக்கும். இயக்குநர் ஏ பீம்சிங் திரைப்படம் என்றால், இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன் என்று உறுதியாக சொல்லலாம். இயக்குநர் ஏ பி நாகராஜன் திரைப்படம் என்றால், இசையமைப்பாளர் கே வி மகாதேவன் என்பது எழுதப்படாத விதியாகவே இருந்து வந்தது.
அப்படித்தான் 1965ல் தனது முதல் படமான “நீர்க்குமிழி” திரைப்படத்தில் இசையமைப்பாளர் வி குமாரை நியமித்ததைத் தொடர்ந்து, அவரது அடுத்த படமான “நாணல்”, “மேஜர் சந்திரகாந்த்” போன்ற படங்களிலும் வி குமாரே இசையமைத்திருந்தார். பாடல்களை சுரதா, வாலி, ஆலங்குடி சோமு ஆகிய கவிஞர்கள் எழுதியிருந்தனர்.
இந்நிலையில் தனது நான்காவது படைப்பாக இயக்குநர் கே பாலசந்தர் உருவாக்கிய ஒரு திரைப்படம்தான் “பாமா விஜயம்”. மாதச் சம்பளம் பெறும் ஒரு நடுத்தரக் குடும்பம் குடியிருக்கும் குடியிருப்புப் பகுதிக்கு அருகே குடிப்புகும் ஒரு திரைப்பட நடிகையின் வருகையால், அதுவரை அமைதியாக, ஒருவருக்கொருவர் அனுசரனையாக வாழ்ந்து வந்த அந்த நடுத்தரக் குடும்பத்தில் ஏற்படும் போலி கவுரவம் மற்றும் பொருளாதார விளைவுகளால் ஏற்படும் விபரீதங்களை நகைச்சுவையோடு சொல்லிய ஒரு படமாகத் தந்திருந்தார் இயக்குநர் கே பாலசந்தர். இத்திரைப்படம்தான் இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதன் இயக்குநர் கே பாலசந்தருடன் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்படம். அதேபோல் கவிஞர் கண்ணதாசனும் இயக்குநர் கே பாலசந்தரின் படத்திற்காக பாடல்கள் எழுதிய முதல் திரைப்படமும் இதுவே.
கே பாலசந்தர் திரைப்படத் துறைக்கு அறிமுகமான புதிதில், அப்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை சவுகார் ஜானகி அவரது வீட்டிற்கு வரவிருந்த பொழுது, வீட்டில் உள்ள அனைவரும் உற்சாகமடைந்த அந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து கே பாலசந்தர் எழுதி, இயக்கிய இந்த “பாமா விஜயம்” திரைப்படத்தை 'மனோகர் பிக்சர்ஸ்' என்ற பாதாகையின் கீழ், தயாரிப்பாளர் எம் எஸ் காசி தயாரித்திருந்தார்.
முத்துராமன், காஞ்சனா, நாகேஷ், சவுகார் ஜானகி, ஜெயந்தி, மேஜர் சுந்தர்ராஜன், டி எஸ் பாலையா, சச்சு, ஸ்ரீகாந்த், எஸ் என் லட்சுமி, எஸ் என் பார்வதி என ஒரு பெரும் நட்சத்திரத் திரளே இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர். படத்தின் டைட்டில் கதாபாத்திரமான பாமா என்ற நடிகை கதாபாத்திரத்தில் நடிகை ராஜஸ்ரீ நடித்திருந்தார். கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுத, எம் எஸ் விஸ்வநாதனின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக வந்திருந்தன.
குறிப்பாக “வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டனா கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா…” என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கிய ஒரு பாடலாகவே அமைந்திருந்தது. படத்தின் வெற்றிக்கு பாடல்கள் பெரிதும் துணைபுரிந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.