பிளாஷ்பேக்: திருமணத்திற்காக பெயரை மாற்றிய ஷாருக்கான்
சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான், கவுரி ஸ்ப்ராட் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்றும் அமீர்கான் 'லவ் ஜிகாத்'தில் ஈடுபடுகிறார் என்றும் சர்ச்சை எழுந்தது. ஆனால் கவுரி கிறிஸ்தவப் பெண் என்றும், தாங்கள் விரும்பியே திருமணம் செய்துகொண்டதால் யாரும் யாருடைய மதத்தையும் மாற்றிக்கொண்டு திருமணம் செய்யவில்லை என்றும் ஒரு விளக்கம் அளித்திருந்தார். இதே போல ஒரு சுவாரசியமான விஷயம் நடிகர் ஷாருக்கானின் திருமணத்தின் போதும் நடைபெற்றுள்ளது. இந்தச் சுவாரசியத் தகவல் முஸ்தாக் ஷேக் என்பவர் எழுதிய 'ஷாருக் கேன்' (sharukh can) என்கிற புத்தகத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.
ஷாருக்கானின் மனைவியான கவுரி இந்து மதத்தைச் சேர்ந்தவர். அப்போது இவர்களது காதலுக்கு கவுரியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஷாருக்கான் தனது பெயரை 'அபினவ்' என்று மாற்றிக்கொண்டாராம். அது மட்டுமல்ல, 'ஜிதேந்திர குமார் துல்லி' என்கிற பெயரையும் அவர் பயன்படுத்தியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து முறைப்படியான திருமணத்தின் போது ஷாருக்கான் இப்படி இந்து பெயரைப் பயன்படுத்தியது போல, கவுரியும் முஸ்லிம் முறையிலான நிக்காஹ்வின் போது தனது பெயரை 'ஆயிஷா' என்று தற்காலிகமாக மாற்றிக்கொண்டாராம்.
ஆனாலும் இவர்கள் இருவரும் யாரொருவரின் மதத்திற்கும் மதம் மாறாமலேயே திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்காக தன்னை இந்துப் பையன் என்று நினைக்க வேண்டும் என்பதற்காக ஷாருக்கான் தனது பெயரை மாற்றியது குழந்தைத்தனமாகவும் முதிர்ச்சியற்ற செயலாகவும் இப்போது தோன்றுகிறது என்று கவுரி கூறியதாக அந்தப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.